×

நாகூரில் கந்தூரி விழாவை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

நாகை, ஜன.9: நாகூர் தர்கா கந்தூரி விழா காலங்களில் பாதுகாப்பான உணவுகளை விற்பனை செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி கூறினார்.
நாகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி ஆண்டு பெருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நாகூரில் நடந்தது. நாகூர் வணிகர் சங்கத் தலைவர் சரவணப்பெருமாள் தலைமை வகித்தார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் வரவேற்றார். நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி பேசியதாவது: தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலிருந்தும் நாகூர் ஆண்டவரை தரிசித்து ஆசி பெறுவதற்காக பக்தர்கள் இந்த கந்தூரி காலத்தில் வருகை தருவார்கள். மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் நான்கு உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்டு இரண்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவினர் கந்தூரி விழா முடியும் வரை உணவு விற்பனை மையங்களை ஆய்வு செய்வது, உணவு மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி விற்பனை மேற்கொள்பவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

டீக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், மீன், ஆடு, மாடு, கோழி கறி ஆகியவை விற்பனை செய்வோர், காய்கறி, பால், பேக்கரி, ஐஸ், இளநீர் மற்றும் தெருவோரமாக தலைச்சுமை மற்றும் தள்ளுவண்டிகளில் பொருட்கள் விற்பனை மேற்கொள்வோர் என்று அனைத்து வகையான உணவு விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம் அல்லது பதிவுச் சான்று அவசியம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு சான்று பெறாமல் உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னயச் சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து உணவை நேரிடையாக கையாளும் இடங்களும் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். உணவை கையாளும் நபர்கள் தன் சுத்தத்தை பேண வேண்டும்.

மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும். கைகழுவும் இடத்தில் சோப்பு வைத்திருக்க வேண்டும். கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்க வேண்டும். அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் மீது தயாரிப்பாளரின் முழு முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உணவு பாதுகாப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இதை எல்லாம் மீறுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். நாகூரில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள்பற்றியோ அல்லது நிறுவனங்களைப்பற்றியோ புகார் இருந்தால் மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 94440 42322 என்ற வாட்ச்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை விபரம் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும், புகார்தாரர் விபரம் ரகசியமாக வைக்கப்படும். உணவு தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு விரைவில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு சான்று வழங்கப்படும். அதேபோல் சுகாதார தரச் சான்றிதழ் பெற்றிட உணவு பாதுகாப்புத்துறையில் உணவு விடுதிகள் விண்ணப்பிக்கலாம் என்றார். வணிகர் சங்க நிர்வாகிகள் ஹிமாயத் அலி, பிலிப்ராஜ், ராமச்சந்திரன், ரமேஷ் மற்றும் சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness meeting ,food vendors ,Nagore ,festival ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்