×

மத்திய, மாநில அரசுகளை வெளியேற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

திருப்பூர்,  ஜன. 9:  மத்திய, மாநில அரசுகளை வெளியேற்ற பொது மக்கள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வேண்டுகோள்  விடுத்துள்ளார். திருப்பூரில் நடந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில்  கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது: குடிகெடுக்கும் சட்டமான புதிய குடியுரிமை  சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை  தனியார் மயமாக்கும் செயல்களை கைவிட வேண்டும். அத்தியாவசிய பொருட்களின்  விலையேற்றத்தால் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பல  ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்தியாவில்  பல்வேறு இனம், மொழி, மதம் நிறைந்த நாடு. ஒரு சிலரை தனிமைப்படுத்தும்  செயல்களில் மத்திய பா.ஜ. அரசு ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.  தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

 மேலும்  பா.ஜ. அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு  தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் ஆதரவு  அளித்து இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் மத்திய,  மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட 25 கோடிக்கு மேல்  இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை வெளியேற்ற பொது மக்கள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும். பா.ஜ. அரசு மக்கள் விரோத  செயல்களில் ஈடுபடுவதை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தொடர்ந்து பல்வேறு  போராட்டங்களை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : governments ,state ,
× RELATED பஞ்சுமிட்டாயில் நஞ்சு கலப்பு…