×

கலெக்டர் தகவல் முத்துப்பேட்டையில் மஞ்சள் கொத்து விற்பனை படுஜோர்

முத்துப்பேட்டை, ஜன.9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சென்றாண்டு தாக்கிய கஜா புயலில் கோரதாண்டவத்தால் பெரியளவில் பாதித்து இருந்தாலும் இந்தாண்டு சோதனையாக சாகுபடி பயிர்களை பூச்சிகள் தாக்குதல் ஏற்பட்டு இப்பகுதி மக்கள் விவசாயிகள் கஷ்டத்துடன் கஷ்டமாக பொங்கலையும் வரவேற்க தயாராகி வருகின்றனர். விவசாயிகளின் வியர்வையில் விளைந்த நெல்லை வீட்டுக்கு எடுத்துவந்து பொங்கலிட்டு குலதெய்வம் மற்றும் சூரியனுக்கு படைக்கும் வழிபாடுகள் குறித்து சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, புறனாநூறு, கலித்தொகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆடியில் தேடிவிதைத்த பயிரின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவகாலம் தைமாதமாகும். தையில் அறுவடை செய்த நெல்லை புத்தரிசியாக்கி, புத்தடுப்பில், புதுப்பானையிலிட்டு சர்க்கரை பால் நெய் சேர்தது பொங்கி உலகை காக்கும் சூரியனுக்கு படையலிடும் நிகழ்வே பொங்கலாகும். வட மாநிலங்களில் பொங்கலை மகரசங்கராந்தி என கொண்டாடுகின்றனர்.

பொங்கல் நாளில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பால்பொங்கலோடு அவரை, புடலை, கத்தரி, வாழை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, பூசணி, பரங்கி சேர்ந்த கறிவகைகளும் படையலில் இடம் பெறும்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரீசியஸ் தீவிலும் கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகையில் கரும்போடு, மஞ்சள் இஞ்சி கொத்துகளுக்கும் முக்கிய இடமுண்டு. மங்களப்பொருளாகவும் மருத்துவ பயனுக்கும் பயன்படும் மஞ்சளானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாயம் எடுக்கவே பயன்பட்ட மஞ்சள் கிழங்கு பின்னாட்களில் சமையறை பூஜையறையை ஆக்கிரமித்தது. மஞ்சளில் பல்வேறு ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இதில் ஆலப்புழை மஞ்சள் உயர்வானதாகும்.
மேலும் முட்டா மஞ்சள், கஸ்தூரிமஞ்சள், மரமஞ்சள், பலா மஞ்சள், காட்டுமஞ்சள், குட மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், குரங்கு மஞ்சள் போன்றவைகளும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு தற்போது விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.

முத்துப்பேட்டை பகுதிகளிலும் விற்பனைக்கு முந்திக்கொண்ட கரும்பைத் தொடர்ந்து சந்தைக்கு வந்துள்ள மஞ்சளானது சீர்வரிசை தட்டின் நடுவே ஒய்யாரமாய் இடம்பிடித்துவிடும்.பொங்கல் வரிசை, முதல்சீர், மாமன்சீர் என “உறவுமுறை பிணைப்புகளை உறுதிபடுத்தும் சீர்வரிசை” நடைமுறையில் மஞ்சள் இன்றளவும் உயிர்ப்புடன் இடம் பெறுகிறது. தஞ்சை, கும்பகோணம், பேராவூரணி, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட மஞ்சள் கொத்துகளை பண்டிகைக்காக வியாபாரிகள் மொத்தமாக விலைபேசி வாங்கி முத்துப்பேட்டை பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இப்பகுதி மக்களும் புயல், சாகுபடி பயிர் பாதிப்புகளையும் கடந்து ஆர்வத்துடன் மஞ்சள் கொத்துகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மஞ்சள் கொத்து வியாபாரம் “ஜரூராக” நடந்து வருகிறது.

இதுகுறித்து முத்துப்பேட்டை வியாபாரி பாலகுமார் கூறுகையில்:
முதலில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ள பகுதிக்கு சென்று கிழங்கின் அடர்த்தி மற்றும் தரம் பார்த்த பிறகே விலை பேசப்படும். கிழங்கின் தன்மையை பொறுத்து விலை மாறுபடும். இப்போது விற்பனைக்கு வந்துள்ள மஞ்சள் கொத்து ஜோடி ரூ 30, 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாங்குவோரும் கிழங்கு மற்றும் வளர்த்தியை பார்த்துதான் வாங்குகின்றனர். அதனால் செழுமையான மஞ்சளை தேடிப்பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் சீர்செனத்தி செய்வோர் கரும்புடன் மஞ்சளையும் சேர்த்தே ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர் என்றார்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...