×

முதல் திட்ட குடிநீர் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

திருப்பூர், ஜன. 9:  திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முதல் குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.  திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்கள் மூலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. மூன்றாவது குடிநீர் திட்டத்தில், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில், குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நான்காம் குடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் திட்டத்தில் 55 கி.மீ, தொலைவுக்கு 350 மி.மீ, விட்டமுள்ள குழாய் அமைத்து, மூன்று நீரேற்று நிலையங்கள் வழியாக குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது. இதில் தினமும் 4.5 எம்.எல்.டி., அளவு குடிநீர் பெறப்படுகிறது. தற்போது நான்காம் திட்டத்தில், 1,500 மி.மீ, விட்டமுள்ள குழாய் பதித்து, தினமும் 165 எம்.எல்.டி., குடிநீர் வழங்கும் வகையில் பணி நடக்கிறது.  

 இதில், முதல் திட்ட குழாய்கள் சேதமடைந்து, குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது. கூடுதல் குடிநீர் பெறும் வகையிலான பணிக்கு, தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள உறிஞ்சு குழாய்கள், சேமிப்பு கிணறு, ஆற்று நீர் பம்ப் செட் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலும் அகற்றி விட்டு, கூடுதல் திறனில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக முதல் திட்ட குடிநீர் வழங்கும் பணி முற்றிலும் நிறுத்தப்படுகிறது.   இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் கூறியதாவது: நான்காம் திட்டப் பணிக்காக முதல் திட்ட குடிநீர் சப்ளை முற்றிலும் தடை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு முதல் திட்ட குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, அதற்கேற்ப மூன்றாம் திட்டத்திலிருந்து கூடுதல் அளவு குடிநீர் பெற்று வழங்கப்படும். இந்நிலையில், வழியோர பகுதியில் உள்ள பொதுக்குழாய்களில் குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


Tags : Project Drinking Water Coalition ,Municipal Commissioner ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...