×

ஊட்டி, மஞ்சூர், பந்தலூரில் வேலை நிறுத்த போராட்டம் மறியலில் ஈடுபட்ட 202 பேர் கைது

ஊட்டி, ஜன. 9: மத்திய அரசின் பொருளாதார ெகாள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், சமூக பாதுகாப்பு உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
 நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருத்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால், யார் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்பது தெரியாமல் போனது. நேற்று அரசு பஸ்கள், தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டன.  அதே சமயம் ெதாழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஊட்டி ஏடிசி பகுதியில் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

  தேசிய மயமாக்கப்பட்ட சில வங்கிகள் செயல்படவில்லை. ஒரு சில வங்கிகள் குறைந்தளவிலான அலுவலர்களை கொண்டு இயங்கின. தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. தபால், நிலையங்களில் குறைந்தளவிலான அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு இயங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஊட்டியில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன. உள்ளூர் விடுமுறையையொட்டி மாநில அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்படவில்லை. இதனால், மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்களா? அல்லது இல்லையா? என்பது குறித்து தெரியாமல் போனது.மஞ்சூர்: மத்திய  அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்து ஐ.என்.டி.யூ.சி.,  சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு  தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம்  மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

 நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நடந்த  போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் ஆல்துரை தலைமை தாங்கினார்.  இ.கம்யூ. செயலாளர் ரகுநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத்தொழிலாளர் சங்க மாவட்ட  தலைவர் ஆரி, மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் முரளிதரன், பொருளாளர்  சவுகத்அலி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர்கள் அலியார், மாதேவன், சுப்ரமணி,  லதா உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவிற்கு ரூ.30 விலை நிர்ணயம்  செய்ய வேண்டும். மலை காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய  வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொதுவிநியோக திட்டத்தை  பலப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்டங்களை  திருத்தியதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை தடுத்து  நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு  ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா தலைமையில் எஸ்.ஐ. ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை  அங்கிருந்து அகற்ற முற்பட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில்  ஈடுபட்டதை தொடர்ந்து சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் ஆல்துரை உள்ளபட 62 பேரை  போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் மேல்முகாமில் மின்வாரிய  மனமகிழ் மன்றத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

பந்தலூர்:பந்தலூரில் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் டேன்டீ தொழிலாளர்கள் மற்றும் தனியார்  தேயிலைத்தோட்டம் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று ஆர்ப்பாட்டம்  செய்தனர். இதில், தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 சட்டங்களாக  குறைத்து தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைக்காதே, அரசு நிறுவனங்களை  தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடு, தினக்கூலி தொழிலாளர்களின் பணிக்கொடை  வருடத்தில் 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்து, வருங்கால வைப்பு  நிதியை மாதம் ரூ.3000மாக உயர்த்தவேண்டும், டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு  தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு நிகரான சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.12.50,  கள மேற்பார்வையாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் தனியார்  தோட்டதொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய். 5.50 போன்றவை  உயர்த்தவேண்டும், தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு தொழில் வரி பிடித்தம்  செய்வதை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாடம்  நடைபெற்றது.   

 முன்wனதாக மேங்கொரேஞ் பகுதியில் இருந்து  தொழிலாளர்கள் பேரணி புறப்பட்டு பந்தலூர் பஜார் வழியாக சென்று நெல்லியாளம்  நகராட்சி வணிக வளாகம் பகுதிக்கு சென்றனர். நிகழ்ச்சிக்கு பி.டபில்.யி.சி.  தொழிற்சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார், எ.ஐ.டி.யூ.சி. தலைவர்  பாலகிருஷ்ணன், எல்.பி.எப்., துணை பொதுச்செயலாளர் மாடசாமி., சி.ஐ.டி.யூ.சி.  தலைவர்கள் பாஸ்கரன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
தொடர்ந்து  மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.  தொடர்ந்து திடீரென  சி.ஐ.டி.யூ.சி. சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை தேவாலா போலீசார்  கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். கூடலூர்:கூடலூரில்  மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கூடலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : strike action ,Ooty ,Bandalur ,Manjur ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்