×

கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி கோவையில் இருந்து செல்லும் கேரளா பேருந்துகள் நிறுத்தம்

கோவை, ஜன. 9:மத்திய அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்து போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன. இதில், கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் காரணமாக கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை, கன்னியாகுமரி, தேனி பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. கோவையில் இருந்து காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று காலை முதல் இயக்கப்படவில்லை. உக்கடத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 9 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் 9 பேருந்துகள் என மொத்தம் 27 பேருந்துகளும் இயக்கப்படவில்லை. உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் பேருந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கேரளாவிற்கு சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மேல் கோவையில் இருந்து கேரளாவிற்கு வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின.

Tags : Kerala ,Kovil ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...