×

பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 இடங்களில் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜன. 9: நாடு முழுவதும் நேற்று நடத்திய பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி 800 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்து ஓட்டுனர்கள் இந்த போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையில் இருந்தே சில பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் நேரம் செல்ல செல்ல போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கினர். இதனால் அனைத்து பேருந்துகளும் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் எந்த பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்படவில்லை. நகர பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் காலையில் இருந்தே அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதால் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொமுச சார்பில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து நகர் மன்றம் வரை பேரணி சென்றனர். இந்த பேரணிக்கு தொமுச நிர்வாகி வேலுச்சாமி தலைமை வகித்தார். மேலும் நகர திமுக செயலாளர் நைனாமுகமது, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

8 மணி நேர வேலை உள்ளிட்ட தொழிலாளர் நல சட்ட உரிமை பறிப்பை கைவிடக் கோரியும் வங்கிகள் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அரசு பொது அலுவலக வளாக அருகில் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு பணியாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி உள்ளிட்ட 12 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. புதுக்கோடடை உள்ளிட்ட 6 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் 800 பேரை போலீசார் கைது செய்தனர்.

கந்தர்வகோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அரசப்பன்,
சிபிஐஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிவேல், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் தலைமையில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக வெள்ளை முனியன்கோவில் திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்து பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏடிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் போலீசார் கைது செய்து திருமண மகாலில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அன்னவாசல்: அன்னவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அன்னவாசல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் தர்மராஜன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், சண்முகம், ஒன்றயக்குழுஉறுப்பினர் ஜோசி,ரங்கசாமி,சோமையா. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மீராமைதீன், நல்லையா உட்பட 92 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : district ,Pirukkottai ,locations ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...