×

வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

கோவை, ஜன.9:  கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசு அலுவலங்களில் சேவை பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார கொள்கை, காலி பணியிடங்களால் ஏற்பட்டு வரும் பாதிப்பு, விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தல், பொதுத்துறைகளை தனியார் மயமாக்க கூடாது என்பன போன்ற 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை, போத்தனூர் உட்பட பல்வேறு பல்வேறு ரயில் நிலையங்களில் பணியாற்றும் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியனை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். 150 பயணிகள் ரயில்களையும், 600 ரயில் நிலையங்களையும், 7 ரயில்கள் உற்பத்தி பணிமனைகளையும் தனியார் வசம் விடும் நடவடிக்கை கூடாது.  ஒரு ஆண்டில் 10 சதவீதம் ஆள் குறைப்பு நடவடிக்கை கூடாது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஒரு மாத சம்பளம் 21 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும். ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. கோவையில் பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்கள் சேலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

மாவட்ட அளவில் 253 வங்கிகள் நேற்று மூடப்பட்டிருந்தன. சுமார் 20 வங்கிகள் இயங்கின. வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘‘வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மய மாக்க கூடாது. வங்கிகளில் வராக்கடன் அதிகமாகி வருகிறது.இந்த தொகையை உடனடியாக வசூலிக்கவேண்டும். வங்கிகளுக்கு வரும் பொதுமக்களிடம் சேவை கட்டணம் வசூலிப்பது கூடாது’’ என பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டது.  சில வங்கிகள் திறக்கப்பட்டிருந்தாலும் சேவை முடங்கியது. நேற்று ஒரே நாளில் வங்கிகளில் சுமார் 350 கோடி ரூபாய்க்கான பண பரிவர்த்தனை முடக்கியது. 1,875 ஏ.டி.எம்.களில் 30 சதவீத ஏ.டி.எம்.களில் போதுமான பணம் நிரப்பபடவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.  திருச்சி ரோடு, அவினாசி ரோடு உட்பட பல்வேறு இடங்களில் எல்.ஐ.சி. அலுவலங்களில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். எல்.ஐ.சி. பாலிசி தொடர்பான சேவைகள் நேற்று முடங்கியது. மாவட்ட அளவில் அனைத்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை தனியார் மயமாக்கக்கூடாது. பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உரிய முறையில் சம்பளம் வழங்கவேண்டும். ஆட்குறைப்பு செய்யக்கூடாது. தற்காலிக பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. சுமார் 200 ஊழியர்கள் நேற்று பணியில் ஈடுபடவில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது.கோவை மத்தியம், தெற்கு, வடக்கு, உடுமலை, திருப்பூர், பல்லடம், நீலகிரியை உள்ளடக்கிய கோவை மண்டல மின் வாரிய அலுவலகங்களில் 12,269 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்று 5,795 பேர் பணியாற்றினர். 6,474 ஊழியர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். 62 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மண்டல அளவில் மின் சேவை பணிகள் முடங்கியது. பெரும்பாலான இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. காலி பணியிடங்களை நிரப்பவேண்டும். பணி பாதுகாப்பு வழங்கவேண்டும். மின் வாரிய பணிகளில் தனியார் மய நடவடிக்கை கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டது.அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்: கோவை, ஜன. 9: மத்திய அரசை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிளை தலைவர் ராபார்ட் தலைமை வகித்தார். இணை செயலர் ஜெயக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Strike strike ,government offices ,
× RELATED லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன...