×

சந்தையில் தற்காலிக கடைகளுக்கு பூட்டு அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

ஈரோடு, ஜன.9: ஜவுளி சந்தையில் உள்ள தற்காலிக கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து 15 கடைகளுக்கு பூட்டு போட்டதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த மார்க்கெட்டில் தினசரி கடைகள், வாரச்சந்தை கடைகள் என 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது.இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரை நடைபெறும் வாரச்சந்தையில் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் வந்து செல்கிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்திற்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும் இந்த ஜவுளி மார்க்கெட்டில் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், அங்கிருந்த கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததாலும் அதை இடித்து ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட ரூ.51.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகளுக்கான பூமிபூஜை கடந்த மாதம் நடந்தது. இங்குள்ள தினசரி கடைகளை இடமாற்றம் செய்ய இதே பகுதியில் தகர கொட்டகை அமைத்து 150 கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து கொடுத்தது.

கட்டுமான பணிகளுக்காக இடத்தை தேர்வு செய்து அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 22 கடைகள் காலி செய்ய வேண்டி உள்ளதால் அவர்களுக்கு கடை ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.  ஏற்கனவே, ஜவுளி வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் ஒரு சிலர் 2 கடைகள், 3 கடைகள் என ஒதுக்கி கொண்டதாகவும், சில கடைகளை குடோனாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பொறியாளர் மதுரம் தலைமையில் செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஜவுளி மார்க்கெட்டில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல கடைகள் பூட்டி கிடந்தது.
ஒரு சில கடைக்காரர்கள் 2 கடைகளை இணைத்து ஒரே கடையாக வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கடைகளை குடோன்களாக பயன்படுத்தி உள்ளனர். கடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் பூட்டி கிடந்த கடைகளை திறக்க உத்தரவிட்டனர். ஆனால், அங்கிருந்த ஜவுளி வியாபாரிகள் கடைகளை திறக்காமல் இருந்தனர். இதனால், சுத்தியல் மற்றும் கடப்பாறையை கொண்டு பூட்டை உடைத்து திறந்தனர்.

பின்னர் கடையில் வைத்திருந்த பழைய பொருட்களை எடுக்கும்படி உத்தரவிட்டனர். கடைகளை காலி செய்த பிறகு அந்த கடைகளை அதிகாரிகள் பூட்டினர். ஆனால், அங்கிருந்த ஜவுளி வியாபாரிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாங்கள் கடையாக தான் பயன்படுத்தி வருகிறோம். எதற்காக கடையை பூட்டுகிறீர்கள் என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான் தர முடியும். அதிகமாக கடை வைத்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு வழங்க கடையை காலி செய்து தர வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால், இங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கனிமார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள தற்காலிக கடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் குடோனாகவும், 2 கடை, 3 கடை வைத்திருந்த கடைக்காரர்களிடமிருந்தும் கடைகளை காலி செய்யும்படி கூறி 15 கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இவை ஏற்கனவே கடை இல்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த மார்க்கெட்டில் ஜவுளி வணிக வளாகம் கட்டுமான பணிகள் துவங்க வேண்டி உள்ளதால் இன்னும் 22 கடைகளை காலி செய்து அவர்களுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டி உள்ளது. ஆனால், ஏற்கனவே கட்டிக் கொடுக்கப்பட்ட தற்காலிக கடைகளில் சில வியாபாரிகள் 2 கடை, 3 கடை வைத்துள்ளனர். இதை எப்படி ஒதுக்கி கொடுத்தார்கள் என தெரியவில்லை. ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான் கொடுக்க முடியும். அதன் அடிப்படையில், 15 கடைகளை கண்டறிந்து அந்த கடைகளை பூட்டியுள்ளோம். இந்த 15 கடைகளையும் கடைகள் இல்லாத வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடைகளை காலி செய்த பிறகு கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆய்வின்போது பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : Merchants ,shops ,
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...