×

கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்

மதுராந்தகம், ஜன. 9: மதுராந்தகத்தில், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து, கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், மதுராந்தகம் ரயில் நிலையத்துக்கு தினமும் காலை 7.30 மணியளவில் வந்து சேரும். இதில், மதுராந்தகம் சுற்று வாட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னை உள்பட பல பகுதிகளில் வேலை, கல்லூரி உள்பட பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இந்த ரயிலில், 13 பெட்டிகள் இருந்தன. அப்போது, இங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு ஓரளவுக்கு ரயிலில் இடம் கிடைத்தது. மேலும், உட்கார இடம் இல்லாவிட்டாலும், நின்று கொண்டே பயணம் செய்தனர். இந்நிலையில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், திடீரென அந்த ரயிலில், 13 பெட்டிகளில் 5 பெட்டிகள் குறைக்கப்பட்டது. தற்போது, அதில் 8 பெட்டிகளில் மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் கடும் நெரிசலில் சிக்கி, பயணிகள் அவதியடைகின்றனர். மேலும் அவர்கள், நிற்க இடமில்லாமல் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

ஏற்கனவே இருந்தது போலவே, புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், நேற்று காலை மதுராந்தகம் ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், ரயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. தகவலறிந்து மதுராந்தகம் எஸ்ஐ பிரகஸ்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள், போராட்டத்தை கைவிட்டு இட நெருக்கடியோடு மீண்டும் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Passengers ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...