×

தாலுகா அலுவலக கழிப்பறைக்கு பூட்டு

பெரும்புதூர், ஜன.9: பெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த கழிப்பறைக்கு பூட்டு போட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார், சர்வேயர், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, இ-சேவை மையம், ஆதார் பிரிவு உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்குகின்றன. பெரும்புதூர் தாலுகாவில் பெரும்புதூர், வல்லம், சுங்குவார்சத்திரம், மதுரமங்கலம், தண்டலம் ஆகிய குறுவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன. இந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் பட்டா, பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு, புதிய ரேஷன் கார்டு பெற விண்ணபிக்கவும். வாரிசு, ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்பட சான்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற பெரும்புதூர் தாலுகா அலுவலக்துக்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் அலுவலகம் வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து தாலுகா அலுவலக வளாத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பறை கட்டிடம் கடந்த 2013ம் ஆண்டு கட்டி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், கழிப்பறையை முறையாக பராமரிக்காமல் விட்டதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் தாலுகா அலுவலக ஊழியர்கள், அந்த கழிப்பறைக்கு பூட்டுபோட்டனர்.  இதையடுத்து அங்கு வரும் பொதுமக்கள், அலுவலக வளாகத்தில் சிறுநீர் கழிப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவறையை பராமரிக்க முடியாமல் பூட்டுபோட்டு பூட்டியது, அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையை சீரமைத்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...