×

வாலாஜாபாத் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் பராமரிக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

வாலாஜாபாத், ஜன.9: வாலாஜாபாத் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி நல்லூர் கிராமத்தில், 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு, 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், தற்போது ஆங்காங்கே சிதலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில், அங்கன்வாடி மையம், ஒன்றிய துவக்கப்பள்ளி, ரேஷன்கடை உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள ரேஷக் கடை அருகில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்த நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தூண்கள் முழுவதும் உடைந்து, படிகட்டுகள் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள குழந்தைகளும், பொதுமக்களும் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். மழை காலங்களில் பலத்த காற்று, மின்னல் அடிக்கும் பொழுது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வீடுகள் மேல் அல்லது சாலையில் விழுமோ என்ற அச்சத்துடன் வாழ்கிறோம். இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்து, இதுவரை பாழடைந்த தொட்டியை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாழடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி விழுந்து இதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்க அதிகாரிகள் முன்வருவார்களா என மனக்குமுறலுடன் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : Nallur village ,Walajabad Union ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...