×

செங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் பொது வேலைநிறுத்தம்

காஞ்சிபுரம், ஜன.9: பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து கட்சி ஆதரவுடன் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அடிப்படையில் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் இருந்து சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து காந்தி சாலை, காமராஜர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். தொமுச நிர்வாகிகள் சுந்தரவரதன், இளங்கோவன், சிஐடியு நிர்வாகிகள் தர், ஜீவா, வசந்தா ஆகியோர் தலைமை தாங்கினர். சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை, விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தால் காஞ்சிபுரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோன்று மாவட்டத்தில் உத்திரமேரூர், பெரும்புதூர், குன்றத்தூர் உள்பட பல பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டோருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனையில் உள்ள 714 பஸ்களில் 219 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மேலும் வங்கிகள் திறந்திருந்தாலும் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்தனர். ஒருசில ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததால் பள்ளிகளிலும் ஒருசில ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இந்த பொது வேலை நிறுத்தத்தால் மின் வினியோகத்தில் பாதிப்பு இல்லை. ஆனாலும், ஒரு சில இடங்களில் மின் தடைகள், பழுது போன்றவற்றை உடனே சரி பார்க்க ஊழியர்கள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும்  மாவட்டம் முழுவதும் மின்கட்டண வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து மின் கட்டணத்தை காலை 9 மணிமுதல் 2.30 மணிவரை வசூலிப்பது வழக்கம். நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தால் அந்த பணி பாதிக்கப்பட்டது. பண வசூலிப்பாளர்கள் பணிக்கு வராததால் காஞ்சிபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பணிகள் மூடங்கின.

இதுதவிர மின்கம்பங்களில் பியூஸ் போகுதல், திடீர் பழுது போன்றவற்றை சரிபார்க்க ஊழியர்கள் இல்லாமல், அதிகாரிகள் திணறினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உத்திரமேரூர்: உத்திரமேரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாற்றுதிறனாளிகள் நல சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் உள்படஅனைத்து சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டபடி உத்திரமேரூர் பஜார் வீதியில் ஊர்வலமாக சென்றனர்.  அப்போது உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலை அரசு மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர், சத்துணவு ஊழியர் சங்கம், அண்ணா தொழிற்சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து பேரணியாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் சென்றனர்.

அங்கு, மத்திய, மாநில அரசுகளின் பாதக கொள்கைகளின் விளைவாக பொருளாதார மந்தம், தொழிலாளர்களின் உரிமை பறிப்பு, பொதுத்துறைகள் தனியார் மயம், லாபம் கொழிக்கும் முதலாளிகளுக்கு மேலும் மேலும் சலுகைகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, முற்றிலும் புதிய வேலைவாய்ப்பு இல்லாமை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அதேபோல் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.திருப்போரூர்: திருப்போரூரில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். திருப்போரூர் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்ட கண்டன ஊர்வலத்தை சங்க கௌரவத் தலைவர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில்மின் வாரியத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். ஊர்வலத்தை திருப்போரூர் பஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அனைவரும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருப்போரூர் வட்ட செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைத் தலைவர் ஜெகதீசன் உள்பட 170க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சிஐடியூ முறைசாரா மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை தாங்கினார். இதில் ரேஷன் பொருட்களை அனைவருக்கும் வழங்கி விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடு. வேலை வாய்ப்பின்மை போக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். அத்தியாவசிய பண்டங்களின் யூக வணிகம் தடை செய்ய வேண்டும். கல்பாக்கம் சுற்றுப்புற இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு. நிரந்தர வேலை வாய்ப்பில் ஒப்பந்த முறையை ரத்து செய். 2014 சாலையோர வியாபாரிகள் சட்டத்தின் அடிப்படையில் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிடு, நிரந்தர இடத்தை ஒதுக்கீடு செய் மற்றும் கூரையுடன் கூடிய கடைகளை கட்டிக் கொடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : strike ,districts ,Chengai ,Kanchipuram ,
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை