×

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிறுத்தப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி ₹5 கோடி புதிய எம்எல்ஏகளுக்கு வழங்கப்படுமா?

திருப்போரூர், ஜன. 9: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின், இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலகச் சொல்லி சசிகலா கட்டாயப்படுத்தினார். இதையடுத்து அவர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார். இதனை சுதாரித்து கொண்ட சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கூவத்தூரில் தங்க வைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அப்போது வெறும் 11 எம்எல்ஏக்களுடன் தனி ஆவர்த்தனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பழனிசாமியுடன் இணைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள். டிடிவி.தினகரனுடன் அணிவகுத்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால், 18 எம்எல்ஏக்கள் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு, அவர்களை பதவி நீக்கம் செய்தார். இதுதொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் நடந்தது. அதில், எம்எல்ஏக்களின் பதவி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தது. இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களின் சட்டமன்ற தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தப்பட்டது.இந்த பிரச்னைகள் நடந்த 2 ஆண்டுகளில் எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் ₹2.5 கோடி வீதம் மொத்தம் ₹5 கோடியை  செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

புதிய எம்எல்ஏக்கள் கடந்த 2019ம் ஆண்டு வந்த பிறகு 2019-20ம் நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலானோர் திமுக எம்எல்ஏக்கள் என்பதால் இந்த நிதியை தவிர வேறு சிறப்புத் திட்டங்கள் எதையும் அதிமுக அரசு வழங்கவில்லை.இதனால், 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு காலியாக இருந்த 2 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை தற்போது புதிதாக வந்துள்ள 18 எம்எல்ஏக்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இவர்களின் பதவிக்காலம் 2021ம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதுவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதலே தேர்தல் ஏற்பாடுகள் நடைபெறும் என்பதால் இந்த 2020ம் ஆண்டுக்குள் வாக்குறுதிகளாக ஏற்கனவே அளித்த சில திட்டங்களை மட்டுமாவது தொகுதிக்குள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.எனவே, புதிதாக வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்களுக்கும் 2016-17 மற்றும் 2017-18ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியான ₹5 கோடியை வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்தால் மக்களின் தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED விளங்கனூர் கிராமத்தில் சேதமடைந்த...