×

வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் ஊராட்சி தரைப்பாலத்தில் மெகா பள்ளம்

வாலாஜாபாத், ஜன. 9: வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ராஜகுளம் வரை செல்லும்   சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான கார், பைக், ஆட்டோ, பஸ், லாரி உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பழமையான தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக மேற்கண்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் தென்னேரி செல்லும் கால்வாயில் கலக்கிறது. தற்போது, இந்த தரைப்பாலத்தில், ஆங்காங்கே சிதிலமடைந்து மையப் பகுதியில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன. பொதுமக்களும் படுகாயம் அடைவது வாடிக்கையாவிட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் கிராமத்தில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான பைக் கார் உள்பட பல்வேறு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதுமட்டுமின்றி இந்த சாலை சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. இதனால், இந்த வழியை பயன்படுத்தி காஞ்சிபுரம் செல்லும் கார்களும், கனரக வாகனங்களும் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.

இந்த சாலையில் உள்ள இந்த தரைப்பாலத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மரண பள்ளத்தில் பைக்கில் செல்வோர், அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். தினமும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தரைப்பாலத்தின் பலத்தை அறிந்துள்ளனர். புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் சென்ற கார், இந்த பள்ளத்தில் சிக்கி  காரில் வந்த குழந்தைகளும் முதியவர்களும் விபத்துக்குள்ளானார்கள். பின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக கிராம மக்கள் அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்.இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகமோ அல்லது நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த தரைப்பாலத்தை சீரமைத்து விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Walajabad Union ,Karur Panchayat Ground ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...