×

மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் விஷப்பூச்சிகளின் கூடாரமான பயணிகள் பஸ் நிழற்குடை

மாமல்லபுரம், ஜன. 9: மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் உள்ள பாழடைந்த பயணிகள் நிழற்குடையில், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதனால், அதனை உடனடியாக இடித்து விட்டு புதிதாக நிழற்குடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பஸ் பயணிகள் நிழற்குடை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது. ஆனால், அதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், நிழற்குடையின் பல பகுதிகளி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.மேலும், நிழற்குடையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதில், நிழற்குடை அருகே பாம்பு, பூரான், தேள் உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே, பாழடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய பஸ் பயணிகள் நிழற்குடை கட்டி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பஸ் பயணிகள் நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. அங்கு செடி கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் உள்ளன. இதனால், நிழற்குடை அருகே பொதுமக்கள் பயத்துடன் சென்று வருகின்றனர்.இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சேதமடைந்துள்ள பஸ் பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக நிழற்குடை கட்டித்தர வேண்டும் என்றனர்.

Tags : Echur ,village ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் அருகே எச்சூர்...