×

மத்திய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

திருவள்ளூர், ஜன. 9: அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.  திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளை தவிர அனைத்து அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது. மேலும், பொது வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் போலீசாரை பாதுகாப்பு என்ற போர்வையில் ஆங்காங்கே நிறுத்தி, இயங்காத அரசு பஸ்களை கூட இன்று டெப்போவில் இருந்து போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரு சில அரசு பஸ்கள் மட்டும், குறிப்பாக நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கிராமங்கள் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன.

அந்த பஸ்களை இயக்கியதாக பஸ் டெப்போ மேலாளர்கள் கூறினாலும், அவை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து ஏற்றிச்செல்ல முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் உட்பட மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் என முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து அடைக்க, தனியார் திருமண மண்டபங்களையும் போலீசார் தயார் நிலையில் வைத்து இருந்தனர்.
இந்நிலையில், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆவடி நாகூர்கனி தலைமையில் நிர்வாகிகள் வி.வேலுச்சாமி, முகமது மீரா, பூவை துரைபாஸ்கர், ஐஎன்டியுசி ஜி.ஜெயபால், ஏஐடியுசி கே.கஜேந்திரன், சிஐடியு கே.ராஜேந்திரன், ஏஐசிசிடியு அதியமான் உட்பட 500க்கும் மேற்பட்டோர் உழவர் சந்தை அருகே கூடினர்.

தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரும் திடீரென சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, எஸ்.பி., அரவிந்தன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால், போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதியில் விலைவாசி உயர்வை குறைத்தல், பொதுத்துறையை பாதுகாத்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று கும்மிடிப்பூண்டியில் தபால் நிலையம் எதிரில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், 25 பெண்கள் உட்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர். குறைந்த பட்ச ஊதியம் ₹21 ஆயிரம், பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, ஏஐடியூசி, ஏஐசிசிடியூ, தொமுச ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்பு, கும்மிடிப்பூண்டி விருந்தினர் மாளிகை அருகிலிருந்து ஊர்வலமாக வந்த தொழிலாளர்கள் தபால் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஏஐசிசிடியூ மாவட்ட பொருளாளர் ஏ.ஜெயராஜ் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன், சிஐடியூ நிர்வாகிகள் கே.அர்ஜூனன், ஜி.சூர்யபிரகாஷ், ஏஐடியூசி தலைவர் ஜெ.அருள் உட்பட 55 பேர் கலந்துகொண்டனர்.
ஆவடி: ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலை வாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ராமன், வேலுசுவாமி, முகம்மது மீரான், அரிதாஸ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆவடி, அம்பத்தூர் பகுதிகளின் சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் அம்பத்தூர் தபால் நிலையம் முன்பு சிஐடியு பகுதி செயலாளர் லெனின் சுந்தர் தலைமையில் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை திரண்டனர். பின்னர், அவர்கள் சிடிஎச் சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் உன்னி, சிபிஎம் பகுதி செயலாளர்கள் பால்சாமி, ராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பூபாலன், சுந்தர்ராஜன், ராமகிருஷ்ணன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் துரைசாமி சிபிஐ மாவட்ட செயலாளர் மாரியப்பன், சிபிஐ பகுதி செயலாளர்கள்  மயில்வாகனன், மனோகரன், மாதவரம் சிபிஎம் பகுதி செயலாளர் கமலநாதன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் கங்காதுரை, ஆவடி ஜான், சரவணன், பன்னீர்செல்வம், கணேசன், குலதேவன், செல்வகுமார் உள்பட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.     பின்னர்,  போலீசார் அவர்களை அம்பத்தூர், வெங்கடாபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில்  அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி தலைவர் ராயப்பன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் நிர்வாகிகள் மாரி, இளங்கோ, நாகராஜ் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை கலைவாணர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறைவைத்தனர்.
திருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் என 200க்கும் மேற்பட்டோர், விலைவாசி உயர்வு, தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுப்பணித்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது வேலை நிறுத்தம் ஒட்டி திருத்தணியில் ஆட்டோக்கள் ஒடவில்லை என்பது குறிப்பிடதக்கது. மறியல் போராட்டத்திற்கு கம்யூனியூஸ்ட் கட்சி  மாநில பொருளாளர் நித்தியானந்தம் தலைமையில் பலர் கலந்துக் கொண்டனர். பின்னர் கைது செய்யப் பட்ட அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

40 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை

வேலைநிறுத்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற தொழிற்சங்கத்தினர் நேற்று ஈடுபட்டனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 40 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் விழுப்புரம் கோட்டம் சார்பில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பொதட்டுர்பேட்டை ஆகிய பகுதிகளில் பஸ் டெப்போக்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் இருந்து தினசரி பல்வேறு பகுதிகளுக்கு 279 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 120க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நேற்று முற்றிலும் இயங்கவில்லை. இதனால் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags : Trade union activists ,district ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...