×

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா மகா அபிஷேகம்

திருவள்ளூர், ஜன. 9: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், ஆருத்ரா மகா அபிஷேகம் இன்று இரவு 9 மணியளவில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் வண்டார்குழலி சமேத வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதலாவதான ரத்தின சபை திருத்தலம் இது. ஒரு சமயம், நடனக் கலையில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்வி எழுந்ததும், வடாரண்ய ஈஸ்வரரும், பத்ரகாளியும் நடனப் போட்டியில் ஈடுபட்டனர். அப்போட்டிக்கு நடுவர்களாக, மூஞ்சிகேச முனிவரும், கார்க்கோடகனும் இருந்தனர்.  பிரபஞ்சமே அதிரும்படியாக பதினாறு தாண்டவங்களை இருவருமே சம அளவில் ஆடினர். இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பதினேழாவது தாண்டவமாக, சிவபெருமான் கீழே விழுந்த காது குண்டலத்தை, தனது ஒற்றைக் காலில் எடுத்துக் காதில் அணிந்தார்.

ஆனால், காளியால் அவ்வாறு ஆட முடியாமல், தலை குனிந்தாள். காளியை வெற்றி கொண்ட தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் என, அழைக்கப்பட்டு, சிவபெருமான், முதல் திருநடனம் புரிந்த ரத்தின சபையாக அது அழைக்கப்படுகிறது.
இப்படி சிறப்பு வாய்ந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதை ஆருத்ரா தரிசனம் என அழைக்கின்றனர். நடராஜப் பெருமானின் ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தலத்தில், விளாம்பழம் சுவாமி திருமேனியில் சாத்தப்பட்டு, அதன் மீது மாதுளை முத்துக்கள் சார்த்தப்படும். அதைப் பார்க்கும்போது, நடராஜப் பெருமான் மீது, ரத்தின கற்கள் பதித்துள்ளது போல் இருக்கும். இப்படி சிறப்பு வாய்ந்த ஆருத்ரா அபிஷேகம், இன்று இரவு 9 மணிக்கு துவங்கி, நாளை அதிகாலை வரை இரவு முழுவதும் நடைபெறும். கோயிலின் தல விருட்சமான ஆல மரத்தடியில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.

இரவு, 9 மணி அளவில், ரத்தின சபாபதி பெருமான், ஸ்தல விருட்சத்தின் கீழ், ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேக விழா துவங்கும்.தொடர்ந்து, கதம்பத் தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் நாளை அதிகாலை வரை நடைபெறும்.
பின்னர், வெள்ளியன்று அதிகாலை 4.30 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் கோபுர தரிசனம் நடைபெறும். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். ஆருத்ரா அபிஷேகத்தை பக்தர்கள் இரவு முழுவதும் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags : Arutra Maha Abhishekam ,Thiruvalangadu ,Vadaranyeswarar Temple ,
× RELATED திருமழிசை, திருவாலங்காடு, பொன்னேரி...