×

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் துணை மின் நிலையம் வேண்டும்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் துணை மின் நிலையம் வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் குடியிருப்புகள், அடுக்குமாடி வீடுகள் அதிகளவில் உள்ளது. எனவே, பெரிய குடியிருப்புகளுக்கு அங்கேயே துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடத்தையும் தேர்வு செய்கின்ற நிலையை உருவாக்கிட வேண்டும். மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் துணை மின் நிலையம் வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை இந்த அவையில் கோரிக்கை வைத்துள்ளேன். பள்ளிக்கரணையில் சென்னை மாநகராட்சியால் குப்ைப கொட்டுகின்ற, தரம் பிரிக்கின்ற இடம் உள்ளது. அங்கேயே இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை தேர்வு செய்து ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

இசிஆர் பகுதியில் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் குறைந்த மின்அழுத்தம் இருக்கிறது. அதனால் பாலவாக்கம் பகுதியில் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தில் துணை மின் நிலையம் அமைத்து கொடுத்தால், குறைவான மின்னழுத்தத்தை போக்க முடியும். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி: உறுப்பினர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், கட்டுமான நிறுவனங்கள் துணை மின் நிலையம் அமைக்க இடம் கொடுக்க மறுக்கின்றார்கள். தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போதே துணை மின் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கிவிட வேண்டுமென்று சொல்லி இருக்கிறோம்.

மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதியில் கோடைகாலத்தில் மின்னழுத்தம் இருப்பது உண்மைதான். அங்கு துணை மின் நிலையம் அமைக்க போதிய இடமில்லாமல் இருக்கிறது. பள்ளிக்கரணை இடத்தை எடுப்பதில் பிரச்னை இருக்கிறது. மாநகராட்சி இடத்தை கேட்கும்போது அதிக விலை கேட்கிறார்கள். இந்த கோடை காலத்தில் மாற்று வழியில் மின்சாரம் கொடுக்க நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும் எதிர்காலத்தில் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Madipakkam ,constituency ,Poonthavaikkavam ,Cholangananallur ,DMK MLA ,
× RELATED ஏன் எதற்கு எப்படி?