×

சிவந்திபுரம் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

வி.கே.புரம், ஜன. 9: வி.கே.புரம் அருகே சிவந்திபுரம் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. அம்பை ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட அலங்காரியம்மன் கோயில் குளம், சிவந்திபுரத்தில் உள்ளது. இந்தக் குளம் மழை காலத்தில் நிரம்பும். இதனால் அருகில் உள்ள சுமார் 50 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். இந்த குளத்தில் மீன்குத்தகை ஏலம் ஆண்டுதோறும் நடைபெறும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால் கடந்த ஆண்டு மீன் குத்தகை ஏலம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மழை செழிப்பாக பெய்துள்ளதால் குளம் முழுவதும் நிரம்பி தண்ணீர் காணப்படுகிறது.

மேலும் குளத்தின் முக்கால்வாசி நீர்ப்பரப்பை அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து குளத்தின் அருகே வசிக்கும் பொட்டம்மாள் என்பவர் கூறுகையில், ‘‘ இந்த குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் நாங்கள் வீட்டில் இருக்க முடியவில்லை. துர்நாற்றம் கடுமையாக உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார். குளத்தில் அமலைச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவை செத்து மிதப்பதாக கூறப்படுகிறது.

Tags : Sivanthipuram ,pond ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...