×

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி

திருவண்ணாமலை, ஜன.9: திருவண்ணாமலை மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் நீக்கத்தால் ஏற்பட்ட சர்ச்சையால் நிறுத்தப்பட்ட 4 உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில், மாவட்ட ஊராட்சி 26 வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து, கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், வெற்றி பெற்ற அனைவரும் கடந்த 6ம் தேதி பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி வெளியான துணை வாக்காளர் பட்டியலில் வேட்பாளர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்த சர்ச்சையால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சீட்டுகள் அனைத்தும் கருவூல அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட 4 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கலசபாக்கம், செங்கம், பெரணமல்லூர் பிடிஓ அலுவலகங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது. இந்நிலையில், கலசபாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஜெ.பாஞ்சாலை என்பவர் 965 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மஞ்சுளா 837 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேபோல், பெரணமல்லூர் ஒன்றியம் ஆணைபோகி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏ.கே.ஜெயச்சந்திரன் என்பவர் 409 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெ.கஜபதி 406 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மேலும், செங்கம் ஒன்றியம் 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.பிரபு என்பவர் 1,316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், கண்ணன்(திமுக) 921, காமராஜ் (அதிமுக) 399, சுயேட்சைகள் ரவி 223, சங்கர் 92, விஜயராஜ் 17 வாக்குகளை பெற்றனர். அதேபோல், மாவட்ட ஊராட்சிக்குழு 26 வார்டு கவுன்சிலர் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமார் 17,870 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர்.செந்தில்குமரன் 16,590 வாக்குகளை பெற்றார். மாவட்ட கவுன்சிலர் 26 வார்டில் திமுக வெற்றி பெற்றிருப்பதால், திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுவில் திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

Tags : DMK ,District Council Elections ,Local Government Elections ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...