×

அரசு ஊழியர் என்பதை மறைத்துதேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்பு ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் புகார்

திருவண்ணாமலை, ஜன.9: அரசு ஊழியர் என்பதை மறைத்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பதவியேற்றதை தடை செய்யக்கோரி கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகார் மனு அனுப்பியுள்ளார். செங்கம் ஊராட்சி ஒன்றியம், 21வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஆர்.சற்குணேசன் என்பவர், மேல்ராவந்தவாடி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முழுநேர அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அரசு ஊழியராக பணிபுரியும் நபர், தேர்தல் போட்டியிடவோ அல்லது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவோ கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், ஆர்.சற்குணேசன், அரசு ஊழியர் என்பதை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்து, தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சரவணன், விசாரணை மேற்கொண்டதில் முழுநேர அரசு பணியாளராக பணிபுரிந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுவது உறுதியானதால், அவர் மீது தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க, மேல்ராவந்தவாடி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவருக்கு கடந்த 3ம் தேதி உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற சற்குணேசன் பதவியேற்றதை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கந்தசாமிக்கு, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், தெரிவித்திருப்பதாவது:

அரசு பணியாளராக இருப்பதை மறைத்து, வேட்புமனுவும், பிரமாண பத்திரமும் தாக்கல் செய்து மோசடியாகவும், முறைகேடாகவும் தேர்தலில் போட்டியிட்டு சற்குணேசன் வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் போட்டியிட இவர் தகுதியற்றவர் என்பதாலும், அரசு ஊழியர் தேர்தலில் போட்டியிட இயலாதவர் என்பதாலும், அவர் தற்போது வெற்றிபெற்றுள்ள பதவிைய வகிக்க தகுதியற்றவர் ஆவார். மேலும், துறை நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க துணைப்பதிவாளரும் உத்தரவிட்டுள்ளார். எனவே, செங்கம் ஒன்றியம் 21வது வார்டு கவுன்சிலராக சற்குணேசன் பதவியேற்றதை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : collector ,election ,servant ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...