×

கலசபாக்கம் ஒன்றியத்தில் 77 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு

கலசபாக்கம், ஜன.9: கலசபாக்கம் ஒன்றியத்தில் 77 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலசபாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக பாஞ்சாலை (77) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மஞ்சுளா என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்குப்பதிவு கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையில் பாஞ்சாலை பெயர், துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த இடத்தில் பதிவான வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையம் தற்காலிக தடை விதித்திருந்தது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து, வேட்பாளர் பாஞ்சாலை குறித்த விபரங்களை ஆய்வு செய்ததில், வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்புமனு பரிசீலனையின்போது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. எனவே, அந்த ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று காலை 9.30 மணியளவில், கலசபாக்கம் பிடிஓ அலுவலகத்தில், ஆரணி ஆர்டிஓ மைதிலி முன்னிலையில் எர்ணாமங்கலம் ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்கு எண்ணிக்ைக முடிவில் பாஞ்சாலை 965 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட மஞ்சுளா 837 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து, பாஞ்சாலை 128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மரிய தேவஆனந்த் சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற பாஞ்சாலைக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : granddaughter ,Kalasakkam Union ,council ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...