×

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

கோவில்பட்டி, ஜன.9: கோவில்பட்டி, விளாத்திகுளம்பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு விற்பனைக்கு அனுப்புவதற்காக விவசாயிகள் பனங்கிழங்குகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் இந்தாண்டு விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தனர். இந்தாண்டு பருவமழை காலத்திற்கு ஏற்றாற்போல் பெய்ததால் மானாவாரி விவசாய சாகுபடியில் ஓரளவு பயன் கிடைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 மானாவாரி விவசாயம் மட்டுமின்றி இந்த வட்டார விவசாயிகளில் பெரும்பாலானோர் பனங்கிழங்கு விளைச்சலிலும் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், முத்துலாபுரம், காமநாயக்கன்பட்டி, ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆத்தூர், நாசரேத், அயன்வடமலாபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. பனைமரத்தின் அடி முதல் நுனி வரை பல்வேறு பயன் கிடைக்கிறது. அதாவது நுங்கு, பதநீர், பனங்கருப்பட்டி, சில்லுகருப்பட்டி, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவை பனைமரத்தில் இருந்து கிடைத்து வரும் நிலையில், இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் ஆகும்.

இந்நிலையில் ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் பண்டிகையின் போது அனைவரும் தங்களது இல்லங்களில் குத்துவிளக்கேற்றி கரும்பு, மஞ்சள்குலைகளை தோரணமாக கட்டி, பனங்கிழகு, அரிசி மற்றும் காய்கறி வகைகளை படையலிட்டு பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு தைப்பொங்கலுக்காக கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம் வட்டார பகுதி கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் கடந்த புரட்டாசி மாதத்தில் தங்களது வீடுகள் அருகில் உள்ள காலி இடங்கள், தோட்ட பகுதிகள் மற்றும் நிலங்களில் குழி தோண்டி பனம்விதைகளை ஊன்றி மூடினர். தற்போது குழிகளில் மூடப்பட்ட பனம் விதைகள் நன்றாக விளைந்துள்ளது. இதனால் விவசாயிகள் குழிகளை தோண்டி, நிலத்திற்குள் விளைந்துள்ள பனங்கிழங்குகளை வெளியில் எடுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தாண்டு பருவ காலத்தில் நன்றாக தொடர் மழை பெய்ததால், பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால் வரும் பொங்கல் பண்டிகை நாளை முன்னிட்டு விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பனங்கிழங்குகளை மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : area ,Valathikulam ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!