×

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் சாலை மறியல் 460 பேர் கைது

தூத்துக்குடி,ஜன.9: மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடந்தது. தூத்துக்குடியில்  ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஹெச்.எம்.எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பெருந்துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், பென்சன் வழங்கும் நிதியை தனியார் வங்கிகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும், மத்திய அரசு தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் பதிவு கூடம் அருகே அதிகாலை 5.30 மணிக்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் சிஐடியூ பேச்சிமுத்து, ஏஐடியூசி சிவராமன், எல்பிஎப் முருகன் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.  மத்தியபாகம் போலீசார், மறியலில் ஈடுபட்ட 74 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் உள்ளிட்ட 97 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுபோல் விளாத்திகுளத்தில் மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்ளிட்ட 179 பேரையும், திருச்செந்தூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்ளிட்ட 178 பேரையும், கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்ளிட்ட 179 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் மாவட்டம் முழுவதும் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 91 பெண்கள் உள்ளிட்ட 469 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாரத் பெட்ரோலியம் கேஸ் பிளாண்ட்டில் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் அங்குள்ள பாட்டிலிங் பிளாண்ட் உள்ளிட்டவை இயங்கவில்லை. இதன்காரணமாக அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பலகோடி  ரூபாய் மதிப்புள்ள சரக்கு பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. ஒரு சில வங்கிகளை தவிர அனைத்து வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. முக்கிய அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மாவட்டத்தில் வழக்கம்போல லாரிகள், பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பல கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் பதிவு கூடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் லாரிகள் ஓடியது. நேற்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்தன. திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தொழிற்சங்கங்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. பகவத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வந்தடைந்தது. அங்கு நடந்த மறியலுக்கு தொமுச பொது செயலாளர் டிசிடபுள்யூ ராஜாமணி, மாவட்ட ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் அழகுமுத்துபாண்டியன், சிஐடியூ மாவட்ட தலைவர் பொன்ராஜ், ஐஎன்டியூசி மாவட்ட துணை செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மறியலில் தொமுச மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு, கிளை செயலாளர் ஜெயக்குமார், மத்திய துணை செயலாளர் முருகன், டிசி டபுள்யூ ஆறுமுகம், சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் முத்துக்குமார், உடன்குடி ஆறுமுகம், மாவட்ட குழு பன்னீர் செல்வம், சிபிஐ ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ஆண்டி மற்றும்  35பெண்கள் உள்பட 178 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று காலையில் பயணியர் விடுதியில் இருந்து புறப்பட்டு நகரின் மெயின்ரோட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் வரை பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று காலையில் பயணியர் விடுதியில் இருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டு ஸ்டேட் பாங்க் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி ஜெபராஜ் மேற்பார்வையில் மேற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார், பேரணியாக சென்றவர்களை கயிறு மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அனைத்து தொழிற்சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினர் அண்ணா பேரூந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் தமிழரசன், மாவட்ட செயலாளர் சேது, நல்லையா, சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட உதவி தலைவர் மோகன்தாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், ஐஎன்டியூசி மாவட்ட பொதுசெயலாளர் ராஜசேகரன், ஐஎன்டியூசி செயலாளர் பழனிச்சாமி, பலவேசம், மாரிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, அனைத்து மருத்துவர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கருப்பசாமி, மகேந்திரன், செல்வம், மாடசாமி, பாண்டி, பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட 179 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் நடந்த போராட்டத்திற்கு ஏஐடியுசி வட்ட செயலாளர் குணசீலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விளாத்திகுளம் வள்ளி திரையரங்கம் அருகில் இருந்து பேரணியாக சென்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : places ,Thoothukudi district ,
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு