×

புதுக்கோட்டையில் வாடகை கட்டிடத்தில் இயங்கிய சார்பதிவாளர் அலுவலகம் வாகைக்குளத்திற்கு இடமாற்றம்? பொதுமக்களை திரட்டி போராட முடிவு

புதுக்கோட்டை, ஜன.9: புதுக்கோட்டையில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகம்  வாகைக்குளத்திற்கு இடமாற்றும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மெயின் பஜாரில் சார்பதிவாளர் அலுவலகம் நீண்டகாலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் மறவன்மடம், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, நடுக்கூட்டுடன்காடு, அரசகுளம், குமாரகிரி, குலையன்காரிசல், கோவங்காடு, இருவப்பபுரம், சாயர்புரம் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு தினமும் சராசரியாக 25 பத்திரங்கள் பதியப்படுகின்றன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை 7 கிமீ தொலைவில் வாகைக்குளத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்றப்படுவதால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 18 பஞ்சாயத்திற்கு உள்பட்ட கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர். மேலும் பத்திரப்பதிவுக்காக அதிகளவில் பணத்துடன் வருவோருக்கு பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் பீட்டர் தலைமை வகித்தார். பேய்குளம் விவசாயிகள் நிலச்சுவான்தார்கள் அபிவிருத்தி சங்க பொருளாளர் குணசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். அலுவலர்கள் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்கள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ‘இந்த அலுவலகத்தின் மூலம் புதுக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியபோதிலும் தொடர்ந்து வாடகை கட்டிடத்திலேயே இயங்குகிறது. சொந்த கட்டிடம் கட்ட அரசுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்ைத வாகைக்குளத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு  மாற்றுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்குவதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

சொந்த கட்டிடத்திற்கு இடம் தயார் புதுக்கோட்டையில் செயல்படும் தூத்துக்குடி ஒன்றிய அலுவலகம் எதிரே கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள சுமார் 2 ஏக்கர் இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ‘சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு கூட்டாம்புளி சாலை அருகே தேவையான நிலம் வழங்க தயாராக உள்ளனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் அரசு அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் மாற்றுவதிலேயே குறியாக உள்ளனர்’ என்றனர்.

Tags : civilians ,Pudukkottai ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை