×

புதுவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் தி.மலை ரவுடி உள்பட 3 பேர் கைது

புதுச்சேரி,  ஜன. 9: புதுவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை ரவுடி உள்ளிட்ட  3 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. புதுவை, உருளையன்பேட்டையில் குற்ற  சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் எஸ்ஐ  வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை கடலூர் ரோட்டில் உள்ள  வணிக வளாகம் முன்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற ஒரு வாலிபரை மடக்கி  விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, போலீசார் அவரை  சோதனையிட்டனர். அப்போது கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது  தெரியவரவே அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உருளையன்பேட்டை காவல் நிலையம்  அழைத்துச் சென்று அதிரடி விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவர் புதுவை,  முருங்கப்பாக்கம், வில்லியனூர் மெயின்ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார  குடியிருப்பைச் சேர்ந்த தெய்வநாயகம் (21) என்பதும், திருவண்ணாமலை கஞ்சா  கும்பலுடன் தொடர்பில் இருந்தது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த  போலீசார், கஞ்சா கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை,  போளூர் தாலுகாவைச் சேர்ந்த சீனு என்ற சீனுவாசன் (44), சுரேஷ் (36)  ஆகியோரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோவுக்கும்  அதிகமா கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார் செல்போன்களை கைப்பற்றி வேறு  யார், யார் இவர்களுடன் தொடர்பில் இருந்தனர் என்ற விபரத்தை திரட்டி  வருகின்றனர். தீவிர விசாரணைக்குபின் நேற்று மாலை 3 பேரையும் கோர்ட்டில்  ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 3  பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா, ஒரு  செல்போன், ரொக்கம் ஆகியவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதில்  சீனுவாசன் மீது தமிழகத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  சமீபகாலமாக கஞ்சா விற்பனையில் புதுச்சேரி, திருவண்ணாமலை இளைஞர்கள்  அதிகளவில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Tags : New Delhi ,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...