×

மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்

விழுப்புரம், ஜன. 9:  விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இது சம்பந்தமாக 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 384 பேர் கைது செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, தொலை தொடர்பு, வங்கி, காப்பீட்டுத்துறை தனியார்மயமாக்கப்படுவதை கைவிடவேண்டும். பொதுவிநியோகத்திட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனம், தபால் அலுவலகம், பிஎஸ்என்எல் உள்ளிட்ட மத்திய அரசுத்துறை அலுவலக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோ, லாரிகள் இயங்கியது. புதுச்சேரி செல்லும் பேருந்துகள் மட்டும் தமிழக எல்லைவரை இயக்கப்பட்டது. இதனிடையே தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடிசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொமுச மாவட்ட கவுன்சில் ஞானப்பிரகாசம், பிரபா தண்டபாணி, ஆவின் ராஜாமணி, மின்வாரியம் சண்முகம், ஆட்டோசங்கம் சுரஷ், நியாயவிலைக்கடை சங்கம் தர், சிஐடியு முத்துக்குமரன், ஏஐடியுசி சவுரிராஜன், எஸ்எம்எஸ் சிவக்குமார், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, டாஸ்மாக் பணியாளர் சங்கம் பிரபாகரன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 145 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிழக்கு பாண்டி ரோட்டிலுள்ள இந்தியன் வங்கி முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மத்திய மோடி அரசை கண்டித்து விழுப்புரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் முருகன் தலைமையிலான 37 பேரை கைது செய்தனர்.

திண்டிவனத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், சின்னபாபுசமுத்திரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட பாலமுருகன் தலைமையிலான 15 பேரும் கைது செய்யப்பட்டனர். வளத்தி கூட்டுரோடு, செஞ்சி நான்கு முனை சந்திப்பு, கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம், திருசிற்றம்பலம் கூட்ரோடு, திண்டிவனம் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 384 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனிடையே கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம், மறியல் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. மேல்மலையனூர்: மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட வளத்தியில்  தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலை மறியல்  நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. போலீசார்  மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

திண்டிவனம்:  திண்டிவனத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து  நிறுத்தியதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில்  சிபிஎம் மாநில செயற்குழு குணசேகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர்  சுப்பிரமணியம், சிபிஎம் மாவட்ட செயற்குழு ராஜேந்திரன் உள்பட நூற்றுக்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு திண்டிவனம் டிஎஸ்பி  கனகேஸ்வரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செஞ்சி: செஞ்சியில் கோரிக்கைகளை திரும்பப் பெறக் கோரி விவசாய தொழிற்சங்கம் சார்பில் செஞ்சி கூட்ரோட்டில் மறியல் போராட்டம் நடந்தது. சிபிஐ வட்ட செயலாளர் நெடுஞ்சேரலாதன், விவசாய தொழிற்சங்க வட்ட செயலாளர் சுசீலா ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது. மறியல் செய்த நெடுஞ்சேரலாதன் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Tags : government ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்