×

பிடமனேரி சாலையில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி பிடமனேரி குடியிருப்பு சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி கோவிந்த வர்மா தெருவில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் சாலையின் இருபுறங்களிலும் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி உள்ளது. சாக்கடை கால்வாய் வழியாக செல்லும் கழிவுநீர் பிடமனேரி ஏரியில் கலக்கிறது. பிடமனேரி சுற்றுவட்டாரத்தெருக்களில் இருந்து வரும் கழிவுநீரும், இந்த தெருவின் வழியாக தான் செல்கிறது. சாக்கடை கால்வாய்கள் இருபுறமும் ஆக்கிரமிப்பினாலும் குருகியது. இதனால் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடி குட்டைபோல் சாலையில் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவராக சுதா ரமேஷ் பதவியேற்றார். கோவிந்த வர்மா தெரு மக்கள் புதியதாக பதவியேற்ற ஊராட்சி மன்றத்தலைவர் சுதா ரமேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். பதவியேற்ற தலைவர் நேரடியாக சாலையில் குளம்போல் தேங்கிநின்ற கழிவுநீரை பார்வையிட்டார். உடனே கழிவுநீர் தேங்காதவகையில், ஊராட்சி ஊழியர்கள் மூலம் நடவடிக்கையில் இறங்கினார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தர்மபுரி பிடிஒ அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் தேக்கத்தால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதிதாக பதவியேற்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தோம். அவர் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். முதல்கட்டமாக சாக்கடை கால்வாய் தூர்வாரும்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

Tags : road ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...