×

கரகதஅள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும்

தர்மபுரி, ஜன.8: பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வாய்க்காலை முழுமையாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வருடங்களாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கரகதஅள்ளியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கழிவுநீர் கால்வாய் காலனி பகுதி வரை அமைக்கப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும், சாலையின் நடுவே அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலுக்கு சிமெண்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கிராம மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கரகதஅள்ளியை சேர்ந்த விஜயகுமார் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 30 குடும்பத்தினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் கழிவுநீர் வசதி இல்லாமல் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்பதால் வயிற்று போக்கு, டெங்கு உள்ளிட்ட தொற்று நோயால் இக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் எங்கள் காலனிக்கு, கழிவுநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பாலக்கோடு பிடிஓவிடம் தொடர்ந்து முறையிட்டோம். இதையடுத்து பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் சார்பில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு எங்கள் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதில் கழிவுநீர் வாய்க்காலை முறையாக அமைக்காமல் சாலையின் நடுவே அமைத்துவிட்டனர்.

கழிவுநீர் வாய்க்காலின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை அகற்றாமல் கழிவுநீர் வாய்க்கால் அமைத்ததால், இங்கு செயல்பட்டு வந்த ரேஷன் கடைக்கு பொருட்கள் கொண்டு வரும் வாகனம் வர வசதி இல்லாமல் ஊருக்கு வெளியே உள்ள தற்காலிக இடத்தில், ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. மேலும் ஊருக்குள் சைக்கிள் உள்ளிட்ட எந்த வாகனப்போக்குவரத்து வசதியும் இல்லாமல்  கடந்த 5 மாதமாக அவதிப்பட்டு வருகிறோம். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் 30 குடும்பங்கள் உள்ள காலனிக்குள், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. காலனியின் எல்லை வரை மட்டுமே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே காலனியில் உள்ள 30 வீடுகளும் பயன் பெறும் வகையில் கழிவுநீர் வாய்க்காலை நீட்டிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டுவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் வாய்க்கால் அமைத்த போது, ஒகேனக்கல் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் கடந்த 5மாதமாக காலனி பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம் வேறு பகுதியில், ஒருவீட்டிற்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே குழாயில் பிடிக்க அனுமதிக்கின்றனர். எனவே காலனியில் உள்ள 30 வீடுகளுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என கூறினார்.

Tags : sewer canal ,Karakatalli ,
× RELATED ராயனூர் கடைவீதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய கோரிக்கை