×

மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க 1,067 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தம்

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்டத்தில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க 1,067 இடங்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 3 மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 25 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல்நிலையங்களில் தினசரி சராசரி 5க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வருகின்றன. இதில் காவல்நிலையத்திற்கு ஒன்று என்ற அளவில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சுழற்சி முறையில் மதுபாட்டில் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. திருட்டு, வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சமீபகாலமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை அதிகம் நடக்கிறது. பண்டிகை கால திருடர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டாலும் தடுக்க முடியவில்லை. தர்மபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட பாரதிபுரம், பழைய தர்மபுரி பகுதியிலும், அதியமான்கோட்டை போலீஸ் எல்லையான ஒட்டப்பட்டி பகுதியிலும், தொப்பூர் போலீஸ் எல்லையில் தண்டுகாரன்பட்டி, சேஷம்பட்டி பகுதியிலும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இண்டூர், பென்னாகரம் பகுதியில், ஏரியூர், காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு நடந்தது. பொம்மிடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் திருட்டு நடந்தது. இந்த திருட்டுக்களை தடுக்க அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி வணிகர்கள், வங்கி அதிகாரிகள், நகைக்கடை அதிபர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில், நகரங்களின் முக்கிய இடங்கள், சாலைகள் சந்திப்பு பகுதிகள், முக்கிய வளைவுகள், மக்கள் கூடும் இடம், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் கடைவீதிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கடைகள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து தர்மபுரி பஸ்ஸ்டாண்ட், சின்னசாமிநாயுடு தெரு, நான்குரோடு சந்திப்பு சாலை, பெரியார் சிலை அருகே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி, ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை, தொப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட கடைவீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் நடந்தாலும், எளிதாக குற்றவாளிகளை சிசிடிவி கேமரா பதிவு மூலம் போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர். இதனால் திருட்டு சம்பவம் சற்று குறைந்துள்ளது.  இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,067 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில், 133 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு 18 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதிலும், 17 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா மூலம் குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் நடக்காமல் இருக்க குற்றவாளிகளை எளிதில் கேமரா மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது என்றனர்.

Tags : locations ,district ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!