×

நாங்குநேரி ஒன்றியத்தில் கிடப்பில் போடப்பட்ட பாலம், சாலைப் பணிகள்

நாங்குநேரி, ஜன.8: நாங்குநேரி ஒன்றியத்தில் சாலை மற்றும் சிறு பாலப்பணிகள் முறையாக  நடத்தவில்லை. மேலும் பணிகள் மந்தமாக நடப்பதால் பொதுமக்கள்  சிரமத்திற்குள்ளாகின்றனர். பருத்திப்பாடு ஊராட்சி சுருளை கிராமத்தில் நடக்கும் பாலப்பணியால் இணைப்பு துண்டிக்கப்பட்டு 4 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுபோல் வெங்கட்ராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிகுளம் சாலையில் சிறியபாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி-நெல்லை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பின் சாலைப் பணிகள் துவங்கியது. இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு சாலையின் குறுக்கே பழுதடைந்த பாலத்தை சீரமைப்பதற்காக பெரியபள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின் பாலம் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. அந்த பள்ளத்தில் பல அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பள்ளம் தோண்டும் போது பொதுக்குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதுவரை சீரமைக்காததால் செட்டிகுளம் கிராம மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். பாலப்பணிக்காக தோண்டிய பள்ளம் வழியாக மாணவ மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஊரகப் பகுதிகளில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Bridge ,Nankuneri Union ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...