×

குழந்தைகள் பாதுகாப்பு இல்ல சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டி

தூத்துக்குடி, ஜன.8: தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தென்மண்டல அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள்  நடந்தன. இதில் தூத்துக்குடி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 25 குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 400 சிறார்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து, பூப்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன் தலைமை வகித்து பேசினார். மேலும் போட்டிகளில்  வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.  
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார் வரவேற்றார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, நன்னடத்தை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் ஜெயா நன்றி கூறினார்.

Tags : Children's Match Game for Kids ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு