முசிறியில் நகைக்கடையில் திருட முயன்ற மதுரை பெண், வாலிபர் கைது

முசிறி, ஜன.8: முசிறியில் நகைக்கடை ஒன்றில் காரில் வந்து திருட முயன்ற பெண்னையும், அவருக்கு உடந்தையாக வந்த வாலிபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முசிறியை சேர்ந்தவர் தங்கவேல்(65). இவர் முசிறியில் நகைக்கடையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று காரில் பெண் ஒருவர், வாலிபருடன் வந்துள்ளார். நகை கடையில் இருந்த உரிமையாளரிடம் தன்னிடம் தங்க நெக்லஸ் ஒன்று இருப்பதாகவும் அதை அடகு வைத்துக் கொண்டு ரூ.50 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் நகைக் கடையில் இருந்த நகையை அடகு வைக்க வந்த பெண் திருட முயற்சித்துள்ளார். அப்போது கைதவறி நகை பெட்டி கீழே விழுந்தது. இதனால் கடை உரிமையாளர் சுதாரிப்படைந்தார். இதில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும், வாலிபரும் கடையில் இருந்து தப்பித்து ஓடினர். இதையடுத்து நகைக்கடை ஊழியர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து தங்கவேல் உடனடியாக முசிறி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் முசிறி நகரில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது முசிறி பைபாஸ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த பெண்ணையும், வாலிபரையும் பிடித்து விசாரணை செய்ததில் நகைக்கடையில் திருட முற்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண் மதுரையைச் சேர்ந்த சியாமளா(49) என்பதும், வாலிபர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(30) என்பதும் தெரியவந்தது. மேலும் மதுரையில் வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு காளிதாசை டிரைவராக பணியமர்த்தி இருவரும் கூட்டாக நகைக்கடையில் திருட முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த முசிறி போலீசார் காரையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Madurai ,jewelery ,
× RELATED பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை பறிப்பு