×

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் முருகன் கஸ்டடி மனு மீது இன்று ரங்கம் நீதிமன்றத்தில் விசாரணை

திருச்சி, ஜன.8: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரூ.13 கோடி மதிப்புள்ள 29 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, முருகனின் கூட்டாளி மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். பெங்களூரு போலீசார் அக்டோபர் 13ம் தேதி முருகனை அழைத்து வந்து பெரம்பலூர் அருகே ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் கணேசனிடமிருந்து 6 கிலோ நகை, மணிகண்டனி–்டமிருந்து 4.800 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சுரேஷ், கணேசன் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேலும் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்கு இடையில் பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து முருகனை 7 நாள் காவலில் திருச்சிக்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேலும் 1 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.

முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் எஸ்பியாக இருந்த ஒருவருக்கு முருகன் ரூ.15 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த காரை வாங்கிக்கொடுத்துள்ளான். அதுபோல் 2015ம் ஆண்டு சென்னையில் நகை கடை கொள்ளை வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்து தப்ப வைப்பதற்காக சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ.18 லட்சம் கொடுத்ததாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நெ.1 டோல்கேட்டில் கடந்தாண்டு ஜனவரியில் நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் முருகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகனை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் பி.டி வாரண்ட்ட வழங்கிய நிலையில் கடந்த 4ம் தேதி முருகனை திருச்சி மாவட்ட போலீசாரிடம் சிறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பலத்த பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வரப்பட்ட முருகனை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். தொடர்ந்து ரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கொள்ளிடம் போலீசார் 7 கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் சிவகாமிசுந்தரி விடுமுறை என கூறப்பட்டதால், திருச்சி ஜேஎம் 3 (பொ) விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் உள்ள முருகனை போலீசார் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் சோமசுந்தரம், மனு மீதான விசாரணை நாளை (8ம் தேதி) நடக்கும் என கூறி ஒத்திவைத்தார். இதையடுத்து கஸ்டடி மீதான விசாரணை இன்று ரங்கம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

Tags : Murugan ,custody hearing ,Punjab National Bank ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...