×

4வது தடவையாக ஊராட்சி மன்ற தலைவரான விவசாயி பொதியப்பன்

முத்துப்பேட்டை, ஜன.8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் ஊராட்சியில் 900க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள இந்த கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.இந்தநிலையில் இப்பகுதியில் வசிப்பவர் விவசாயி பொதியப்பன்(70), திமுகவை சேர்ந்த இவர் 1986ம் ஆண்டில் நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 1991ம் ஆண்டு தேர்தலிலும் பொதியப்பன் நின்று வெற்றி பெற்றார். பின்னர் 1996ம் ஆண்டு தேர்தலில் ராசகோபால் என்பவரிடம் 48வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இருந்தும் தளராத பொதியப்பன் 2001ம் ஆண்டு தேர்தலில் நின்று மீண்டும் வெற்றி பெற்று தலைவரானார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு கற்பகநாதர்குளம் ஊராட்சி தலைவர் பெண் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பொதியப்பன் தனது மனைவி வசந்தாவை நிற்க வைத்து ஊராட்சி மன்ற தலைவராக்கினார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலிலும் வசந்தா நின்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு தேர்தல் நடக்காத நிலையில் இந்த 2020ம் ஆண்டு தேர்தலில் இந்த ஊராட்சி மீண்டும் ஆண் பொது தொகுதியாக மாறியது. இதனையடுத்து இந்த தேர்தலில் மீண்டும் பொதியப்பன் போட்டியிட்டார். இதில் 483வாக்குகள் பெற்று 4வது முறையாக வெற்றி பெற்றார். இந்த முறையோடு 6வது முறை இவரும், இவரது மனைவியும் மாறி மாறி ஊராட்சி மன்ற தலைவராகி மக்கள் சேவையாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பதவியேற்ற பொதியப்பனை கிராம மக்கள் மாலைகள், சால்வைகள் அணிவித்து பாராட்டினர்.

Tags : Panchayat Council ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை...