×

முத்துப்பேட்டை தர்காவில் புனித அந்திக்கூடு ஊர்வலம்

முத்துப்பேட்டை, ஜன.8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 718-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த மாதம் 27ம் தேதி அன்று துவங்கியது. ஓவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நாளான நேற்று முன்தினம் அதிகாலை புனித சந்தன கூடு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது,
இந்நிலையில் உள்ளுர் மக்களுக்காக நடத்தப்படும் புனித அந்திக்கூடு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதனை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் துவக்கி வைத்தார். அந்திக்கூடு ஊர்வலம் தர்காவில்லிருந்து புறப்பட்டு அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை சுற்றி வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் கேரளா மாநிலத்தின் இஸ்லாமிய பாரம்பரிய பாட்டுக்கு ஆடியபடி ஏராளமான கேரளாவை சேர்ந்தவர்கள் சென்றனர். மேலும் ஊர்வலத்தில் நெடுவெங்கும் வந்திருந்த இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து மத பக்தர்கள் பூக்களை வாங்கி அந்திக்கூடு மீது வீசி தங்களது வேண்டுதலை கேட்டு பிரார்த்தனை செய்தனர். முத்துப்பேட்டை டி.எஸ்.பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்ஐ உஷாதேவி உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : procession ,St. Antichrist ,Muttupettai Dargah ,
× RELATED பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த...