×

பொங்கல் பண்டிகையையொட்டி மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்

பேராவூரணி,ஜன. 8: பொங்கல் பண்டிகையையொட்டி பேராவூரணி பகுதியில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் நாளில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி மண்பாண்டங்களில் புத்தரிசி போட்டு பொங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர்.கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், காவிரி நீர் முறையாக வராததாலும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது. கடந்தாண்டு பருவமழையும், காவிரி கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீரும் முழுமையாக கைகொடுத்துள்ளது. அதனால் முழுவீச்சில் விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதைெயாட்டி பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பேராவூரணி பகுதியில் நீலகண்டபுரத்தில் மண்பாண்டம் செய்யும் (குலாலர்) குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாகும். இப்பகுதிகளில் குடிசை தொழிலாகவும் உள்ளது.

நீலகண்டபுரத்தில் மண் பானைகள், மண் அடுப்புகள், மண் சட்டிகள், மண் மூடிகள், கறிச்சட்டிகள், மடக்குமூடி, மூக்குசட்டி, பூந்தொட்டி, மண்கூஜா, குவளை, பூச்சாடி, மண் உண்டியல், இரட்டை அடுப்பு, ஒற்றைக்கல் அடுப்பு, குத்துவிளக்கு, கார்த்திகை தீபவிளக்கு, மண்குதிரை, மதலை பொம்மை, விநாயகர் சிலை ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆலத்தூர், திருச்சிற்றம்பலம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், ஆவுடையார்கோவில், கறம்பக்குடி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று வாரச்சந்தைகளிலும், கோயில் திருவிழாக்களிலும், பொங்கல் பண்டிகையின்போது சுற்றுவட்டார பகுதிகளுக்கும் எடுத்து சென்று வியாபாரம் செய்கின்றனர். மண்பாண்டங்கள் தயாரிப்புக்கு முன்பெல்லாம் ஆறுகள், நீர் ஓடைகள், வாய்க்கால் பகுதிகளில் உள்ள களிமண்கள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து மண்பாண்டங்களை தயாரித்து வந்தனர். தற்போது இவை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் களிமண்ணை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. மண்பாண்ட தயாரிப்பின் முக்கிய அம்சமாக விளங்கும் “திருகுசக்கரம்” வாயிலாகவே மண்பாண்டங்களை தயாரிக்கப்படுகின்றன.
பொங்கலுக்கான பானைகள், சட்டி அவற்றுடன் தண்ணீர் குடம், சிறுகலையம், அகல்விளக்கு, முகூர்த்தப்பானை, பூந்தொட்டிகள் என பல்வேறு வகையான பொருட்களை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

மண் பாண்டத்தில் சமைப்பதும், மண்பானை சோறு ஆரோக்கியத்தை தரும் என்பதால் கிராம குடியிருப்பு பகுதிகளில் பலவற்றில் இன்றளவும் மண்பாண்ட பயன்பாடு தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் நகர் பகுதியில் உலோக பயன்பாடு இருந்தாலும் கூட பொங்கல் நாளில் மண்பாண்டங்களை தேடி பிடித்து வாங்கி அதில் பொங்கலிட்டு வருகின்றனர். மண்பாண்டத்தில் சமைக்கும் உணவுகள், அருந்தும் நீர்கள் சுவையாகவும் இருப்பதால் அதில் சமைத்து உண்பவர்கள் இதை தேடி பிடித்து ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலால் பெரிதாக லாபம் கிடைக்காவிட்டாலும் பரம்பரையாக இந்த தொழிலை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் நீலகண்டன் சங்கரன் கூறியதாவது: பானைகள், சட்டி மண் மூடிகள் தயாரிப்புக்கான மண் அருகே உள்ள ஆதனூர் பெரிய ஏரியில் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாட்டு வண்டியின் விலை ரூ.1000 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நீர் விட்டு நனைத்து, குலைத்து, புளிக்க வைத்து, உருப்படிகள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இவற்றில் செம்மண் கலவை பூசி சூளையில் அடிக்க வேண்டும். இதற்கு தேவையான மட்டை, வைக்கோல் விலையும் அதிகமாகி விட்டது. இதனால் பலர் இத்தொழிலை விட்டு விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.  ஆனால் பெரும்பாலோர் பாரம்பரியமான இத்தொழிலை விட மனமில்லாமல் தொடர்ந்து செய்து வருகிறோம். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு இதில் லாபம் இல்லாததால் குடும்பத்தின் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்தொழிலை செய்து வருகிறோம் என்றார்.

Tags : festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!