புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

புதுக்கோட்டை,ஜன.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2019-2020 தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன்பெறும் வகையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் வெள்ளாளவிடுதி, ரெகுநாதபுரம், கீராத்தூர், மணமடை, காட்டாத்தி, மாங்கோட்டை ஆகிய கிராமங்களிலும், கந்தர்வகோட்டை வட்டத்தில் வீரடிப்பட்டி, மங்களாகோயில் (வெள்ளாளவிடுதி), குளத்துநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும், இலுப்பூர் வட்டத்தில் இலுப்பூரிலும், ஆலங்குடி வட்டத்தில் வடகாடு, நெடுவாசல், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கிராமங்களிலும், அறந்தாங்கி வட்டத்தில் ஆ.குடிகாடு, அமர சிம்மேந்திரபுரம் ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம்.

Tags : Opening ,Paddy Purchasing Centers ,Pudukkottai District ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...