×

தாராபுரம் அருகே வேளாண்பூண்டி ஊராட்சி தலைவராக 60 வயது மூதாட்டி தேர்வு

தாராபுரம், ஜன. 8:   தாராபுரம் அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றியம் வேளாண்பூண்டி ஊராட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் திலகவதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாராபுரம் அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றியம் அரிகரன்வலசு, தோல் நகரைச் சேர்ந்தவர் திலகவதி (60). இவர் வேளாண்பூண்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் வேளாண் பூண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஊராட்சி மன்ற தலைவராக திலகவதி பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு வேளாண் பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மாலமேடு, கிராம மக்கள் அவருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். வேளாண்பூண்டி ஊராட்சியின் வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 60 வயது பெண்மணி ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

இது குறித்து தலைவராக பதவியேற்ற திலகவதி கூறியதாவது: நான் 60 வயதில் போட்டியிட்டு வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆசி பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்றுவதே எனது வாழ்நாள் லட்சியம். மேலும் எனது பதவிக் காலம் முடியும் வரை இப்பகுதி கிராம மக்களுக்கு தெருவிளக்கு, சாக்கடை வசதி, குடிநீர், தார்சாலை ஆகிய வசதிகளை எந்த குறைபாடும் இன்றி செய்து கொடுப்பேன். முருங்கை வரத்து அதிகம் உள்ள காலங்களில் முருங்கையை பதப்படுத்தி வைக்கும் குளிர்பதன கிடங்கை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மாலமேடு சந்தையை விரிவுபடுத்தி விளை நிலங்களில் விளையக் கூடிய பொருட்களை நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்வதற்கும், பொதுமக்கள் வாங்குவதற்கும் வழிவகை செய்வேன். கிராம பெண்களுக்காவும், பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதே எனது வாழ்நாள் லட்சியமாக இருந்து வந்தது. அதைப் பயன்படுத்துவதற்கு இந்த வெற்றி வாய்ப்பு எனக்கு கைகொடுக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Tags : panchayat ,Muthatti ,Dharapuram ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு