×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் கரும்பு வெட்டும் பணி தீவிரம்

ஈரோடு, ஜன.8: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது கரும்பு. இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் காவிரிக்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.இதுகுறித்து கரும்பு அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பொழிவு, ஆற்றில் தண்ணீர் வரத்து போன்ற காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவிரி கரை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்துள்ளோம்.  ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 28 ஆயிரம் கரும்புகள் விளையும். இதில், 400 கரும்பு கொண்ட கட்டு அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் இந்த விலையில் மாற்றம் இருக்கும். சமயசங்கிலி பகுதியில் வெட்டப்படும் கரும்புகள் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : festival ,Erode ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா