×

உள்ளூர் விடுமுறை நாளில் இன்று சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள்

ஊட்டி, ஜன. 8:ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு இன்று 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ேபான்ற பகுதிகளில் அதிகளவு படுகர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. கிராம் தோறும் இவ்விழா நடத்தப்பட்டாலும், கோத்தகிரி அருகேயுள்ள பேரகிணி பகுதியில் உள்ள ெஹத்தையம்மன் கோயில் திருவிழாவே வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் வசிக்கும் மக்களும் இங்கு வந்து இவ்விழாவை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், படுகர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் விழா நடக்கும் முக்கிய நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கிறது.

இம்முறையும் இன்று பேரகிணியில் விழா நடக்கும் நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் பேரகிணி செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஊட்டியில் உள்ள சில அரசு உதவிப்பெறும் பெண்கள் பள்ளிகளில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புக்களை வைத்துள்ளார்களாம். சில பள்ளிகளில் 11ம் வகுப்புக்கும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், கட்டாயம் அனைத்து மாணவர்களும் சிறப்பு வகுப்பிற்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், விழாவில் கலந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவு உள்ள போதிலும், சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இது போன்று சிறப்பு வகுப்புக்களை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பொங்கல் விடுமுறையின் போதும், சிறப்பு வகுப்புக்களை நடத்துவதாகவும், அதற்கும் மாணவர்கள் வர வேண்டும் என தற்போதே மாணவர்களுக்கு சில பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாம். இதனால், சமவெளிப் பகுதிகளை சேர்ந்த பல அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.

Tags : Schools ,holiday ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...