×

மாநகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க 40 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

கோவை, ஜன. 8: குப்பைகளை வீடு வீடாக சென்று தரம் பிரித்து வாங்க 40 (டாடா ஏஸ்) வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 முதல் 1000 டன் குப்பைகள் வருகின்றன. இதில் மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அதாவது சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 59 மையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டுவிட்டன, விரைவில் செயல்பட உள்ளன. இதற்காக குப்பைகளை வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க 102 வாகனங்கள் வாங்க மாநகராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டன. இதில் தற்போது 40 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : corporation area ,
× RELATED மாநகராட்சி பகுதியில் முக கவசம்...