×

சூலூரில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

சூலூர், ஜன.8:  லூரில் ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்யதனர். சூலூர் அருகே பள்ளபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். கூட்ஸ் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். புத்தாண்டு தினத்தன்று பாரதி நகர் பகுதியில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது எதிரில் வந்த அதே பகுதியை சேர்ந்தவருடைய கார் மீது ஆட்டோ உரசியதாக தெரிகிறது. அப்போது இருவரும் பேசி சமாதானமாக சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளபாளையத்தைச் சேர்ந்த அந்த நபர், செந்தில் குமாருக்கு போன் செய்து ஆட்டோ வாடகைக்கு வேண்டும் எனக்கூறி பீடம்பள்ளிக்கு வரவைத்துள்ளார். அங்கு வந்த செந்தில்குமாரை, காரில் மறைந்திருந்த 4 பேர் ஒரு குழியில் தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் மயக்கமடைந்த செந்தில்குமார் இறந்து விட்டதாக நினைத்து அந்த 4 பேரும் அவர்கள் வந்த காரில் ஏற்றி பள்ளபாளையத்தில் உள்ள குளம் அருகே வீசிச் சென்றுள்ளனர். இதற்கிடையே அந்த வழியாகச் சென்றவர்கள் சிலர் செந்தில்குமார் மயங்கி கிடந்துள்ளதை பார்த்துள்ளனர். பின் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே செந்தில்குமாரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி அவரது மனைவி தங்கமணி சூலூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமாரின் உறவினர்கள், பொதுமக்கள் பள்ளபாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சண்முகம் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாரதிபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
 தகவலறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமாதானம் பேசினார். உடனடியாக குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்வதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : arrest ,auto driver ,Sulur ,
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி