×

இன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல்

கோவை,ஜன.8: இந்தியா முழுவதும் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் கோவையை சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளனர். மாநகரில் 10 இடங்களில் மறியல் நடக்கிறது. மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், எல்பிஎப் உள்ளிட்ட 10 சங்கங்களில் சார்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கக்கூடாது, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க சட்டம் இயற்றவேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை கைவிட வேண்டும், அமைப்பு சார தொழிலாளருக்கான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடக்கும் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், எல்பிஎப், எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டீடியு, வங்கி ஊழியர்கள்,

பிஎஸ்என்எல், காப்பீட்டு ஊழியர்கள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2 பிரிவாக போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  ஒரு பிரிவினர் பணிக்கு செல்லாமல் மறியல் போராட்டத்திலும், மற்றொரு பிரிவினர் பணிக்கு சென்று மதியம் 12 மணியிலிருந்து 12:10 மணி வரை சாலையில் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி, அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் சாலை மறியல் செய்யப்படுகிறது.

கடந்த ஆறு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் இருக்கும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அதேபோல ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டூ விலர் டாக்சி, ஆட்டோ தொழிலில் பெருநிறுவனங்கள் நுழைவு ஆகியவற்றை கண்டித்து கோவை பூ மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டம் நடக்கிறது. ரயில்வே, ஆயுள் காப்பீடு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் ஆனைமலை மற்றும் அன்னூரில் மறியலும், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம், இளைஞர் பெருமன்றம் சார்பில் சிவனானந்தா காலனியில் ஆர்ப்பாட்டமும், அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டமும் நடக்கிறது. சிறு,குறு தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன. ஹோட்டல்,பேக்கரி,சிறு டீக்கடைகள்,சாலை போக்குவரத்து சங்கங்கள் சார்பில் வாடகை வேன்,டெம்போ,சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Strike ,places ,All India Strike District ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து