×

சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்

ஈரோடு, ஜன.8: ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 4 மாவட்ட கவுன்சிலர்கள், 10 ஒன்றிய கவுன்சிலர்கள், 24 பஞ்சாயத்து தலைவர்கள், 200க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய அளவில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். நகர பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நீதிமன்றம் நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி முறைகேடு செய்துதான் வெற்றி பெற்றுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ஜவுளி தொழிலில் திருப்பூருக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டு வரி 2 ஆயிரம் கோடி ரூபாயை  மத்திய அரசு வழங்காமல் உள்ளது.

மத்திய அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டிய தருணம் இதுவல்ல. தமிழகத்தில் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், குரூப் தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக புகார்கள் வருகிறது.  கோபியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கு கோபியை சேர்ந்த அமைச்சர் முட்டுக்கட்டையாக  இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவதுபோல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.  இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

Tags : speech ,legislature ,governor ,Tamilnadu ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...