ஊராட்சி தலைவர் பதவியை குறி வைக்கும் பா.ம.க.

பவானி, ஜன.8: அ.தி.மு.க. கூட்டணியில் அம்மாபேட்டை, அந்தியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை பா.ம.க. குறி வைத்துள்ளதால் அ.தி.மு.க. தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில் பவானி, அம்மாபேட்டை மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க.வுக்கு சீட் வழங்கப்பட்டது.இதில், பவானி, அம்மாபேட்டை ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு தலா 3 சீட்டிலும், அந்தியூர் ஒன்றியத்தில் 2 சீட்டிலும் போட்டியிட்டு பா.ம.க. வெற்றி பெற்றது. 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவியை கடும் போட்டிக்கிடையே பாமக வெற்றி பெற்றது. இந்நிலையில், அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை பா.ம.க.வுக்கு வழங்க வேண்டும் என பா.ம.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 இடங்களில் தலா 7 இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. பா.ம.க. 2 இடங்களில் வென்றது. தலைவர் பதவி வேட்பாளர், வெற்றி பெற பா.ம.க. ஆதரவு கட்டாயம் தேவை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க.வுக்கு அம்மாபேட்டை மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல், தற்போதும் அ.தி.மு.க. கூட்டணியில் முக்கியத்துவம் அளித்து இரண்டு ஊராட்சிக் குழுத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ம.க. தரப்பு எதிர்பார்க்கிறது. அ.தி.மு.க. தரப்போ பா.ம.க.வுக்கு ஒரு ஊராட்சியில் தலைவர் பதவியும், மற்றொரு ஊராட்சியில்  துணைத் தலைவர் பதவியும் வழங்கலாம் என திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags : election ,Lok Sabha ,
× RELATED வாங்கும் திறனை அதிகரிக்க செய்யாமல்...