×

புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி தலைவர்கள் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

ஈரோடு, ஜன.8: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் புதியதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி தலைவர்கள் துப்புரவு பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கிடைக்க வேண்டிய நிதி மற்றும் உரிமைகளை பெற்று ஊரக பகுதி மக்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துவதோடு கல்வி, விவசாயம், சுகாதாரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், ஊராட்சிகளில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு கால ஏற்றமுறை ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : leaders ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...