×

மரம், செடி வளர்ந்து உள்ளதால் சம்பத் நகர் குடியிருப்பில் விரிசல்

ஈரோடு, ஜன.8: தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம் மூலம் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் 414 வீடுகள் கொண்ட  அடுக்குமாடி குடியிருப்புகள் 4 பிரிவின்கீழ் கட்டப்பட்டுள்ளது. இங்கு அரசு  ஊழியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள 16  வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவை இடிக்கப்பட்டது. தற்போது  இங்கு 398 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளிலும் ஆங்காங்கே மரம், செடிகொடி  வளர்ந்து காட்சியளிக்கிறது. மேலும், பல வீடுகளில் கழிவுநீர் குழாய்களில்  உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்து வெளியேறி வருகிறது.

இதுகுறித்து  குடியிருப்புவாசிகள் கூறுகையில்,`வீட்டுவசதி வாரியம் சார்பில் இங்கு  கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள்  ஆனநிலையில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது. செடி, கொடிகள்,  மரங்கள் முளைத்துள்ளதால் கட்டிடத்தின் பல இடங்கள் மோசமாக உள்ளது. இதை  அகற்றி விரிசலை சரி செய்ய வேண்டும். இல்லையெனில், கட்டிடம் இடிந்து விழும்  நிலை ஏற்படும். இதை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றனர். வீட்டுவசதி வாரிய அதிகாரிகள்  கூறுகையில்,`மரம், செடிகொடி முளைத்துள்ள இடங்கள், விரிசல் ஏற்பட்டுள்ள  குடியிருப்புகளை சரி செய்ய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. உரிய நிதி வந்த  பிறகு அனைத்து குடியிருப்புகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  சம்பத்நகர் குடியிருப்பை பொருத்தவரை பராமரிப்பு நிதியை கொண்டு விரைவில் சரி  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : flats ,plants ,Sampath Nagar ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்