×

மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றதையொட்டி புதுப்பொலிவு பெறும் ஊராட்சி அலுவலகங்கள்

சிவகாசி, ஜன. 8: உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பதையொட்டி, சிவகாசி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் புதுபொலிவுடன் காட்சியளிக்கின்றன. தமிழகத்தில் 2016 அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்தது. அதன்பின்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், அதிகாரிகளின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வந்தன. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆணையாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர்கள் கீழும், ஒன்றியங்களில் பிடிஓக்களின் கீழும் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வந்தன. இதில், முதற்கட்டமாக தற்போது கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவைகளில் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். இதனையொட்டி கிராம உள்ளாட்சி அமைப்புகள் புதுபொலிவு பெறத் துவங்கியுள்ளது.  சிவகாசி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தலைவர்கள் பதவியேற்று கொண்டதையொட்டி தங்களது அலுவலகங்களை தூய்மைப்படுத்தினர். கிராமங்களில் அமைந்துள்ள அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலங்கள் நேற்று முன்தினம் முதல் பஞ்சாயத்து தலைவர்களின் கட்டுப்பாட்டில் வரத்துவங்கியுள்ளன.

இதனால், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அனைத்து மராமத்தும் பணிகள் செய்யப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு புத்தம் புதிதாக காட்சியளிக்கின்றன. ஊராட்சி மன்ற தலைவர்கள் பலரும் அலுவலகத்தின் முன்புறம் பந்தல் அமைத்தும் மைக்செட் போட்டு தங்கள் பணிகளை துவக்கியுள்ளனர். ஒரு சில ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி மன்றத்தில் அதிகாலையில் கணபதி ஹோமம் நடத்தி பொறுப்பேற்று கொண்டனர். ஊர் தலைவரின் பதவியேற்பு விழாவில் கிராமமக்களும் திரளாக கலந்து கொண்டனர். ஒரு சில கிராமங்களில் பொதுமக்களுக்கு விருந்தும் வைக்கப்பட்டது. இதன் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின்பு கிராமங்களில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்கள் புத்தம் புதிய பொலிவு பெற்று காட்சியளித்து வருகிறது.

Tags : Representatives ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்